குன்னூர் பகுதியில் சுற்றித்திரியும் கரடி - பொதுமக்கள் அச்சம்


குன்னூர் பகுதியில் சுற்றித்திரியும் கரடி - பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 13 Jun 2019 3:30 AM IST (Updated: 13 Jun 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

குன்னூர், 

குன்னூர் மற்றும் சுற்றுப்புறபகுதிகள் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக கரடிகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தில் 3 கரடிகள் நடமாடி வந்தன. இதில் 7 வயதுள்ள பெண் கரடி கடந்த 6-ந் தேதி சோகத்தொரை சாலையில் தேயிலை தோட்டம் அருகே இறந்து கிடந்தது. இந்த நிலையில் மற்ற 2 கரடிகளில், ஒரு கரடி கடந்த 2 நாட்களாக பழத்தோட்டம் சோகத்தொரை சாலையில் சுற்றித்திரிந்து வருகிறது. 

இந்த கரடி இறந்து போன கரடியை தேடி திரிவதாக கூறப்படுகிறது. கரடி சுற்றித்திரியும் பழத்தோட்டம் சோகத்தொரை சாலை பிரதான சாலையாக இருப்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். எனவே தொழிலாளர்களை கரடி தாக்கும் அபாயம் உள்ளது. 

எனவே கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story