பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்


பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:30 PM GMT (Updated: 13 Jun 2019 12:45 PM GMT)

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி, 

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று, கும்பாபிஷேகம் 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 9–ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், பல்வேறுகால யாகசாலை பூஜைகள் நடந்தது.

விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜை, 6 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜை, 7 மணிக்கு நாடி சந்தானம், 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 8.30 மணிக்கு யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், திருமலைக்குமார சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

500 போலீசார் குவிப்பு 

கும்பாபிஷேக விழாவில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக நேற்று பண்பொழியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலின் மலையடிவார பகுதியான வண்டாடும் பொட்டல் பகுதியில் அன்னதானக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வேன்கள் ஆய்வு 

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்களை 20 வேன்களில் இலவசமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே மற்ற வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது.

இதற்காக பயன்படுத்தப்படவுள்ள வேன்களை ஆய்வு செய்யும் பணி, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் வேன்களை ஆய்வு செய்தனர். அந்த வேன்களின் தகுதிச்சான்று, காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

Next Story