காவிரி தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி கதவணைக்கு அஞ்சலி செலுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்


காவிரி தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி கதவணைக்கு அஞ்சலி செலுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:00 AM IST (Updated: 14 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி திருக்குவளை அருகே கதவணைக்கு அஞ்சலி செலுத்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக காவிரி நீர் முறையாக வந்து சேராததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதியில் உள்ள நாகை மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டாவது காவிரி நீர் கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாத காரணத்தால் நாகை மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 2½ லட்சம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் குறுவை சாகுபடிக்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று, குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மடப்புரம் கிராம விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தொட்டி வாய்க்காலில் உள்ள கதவணைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக பெற்று தர வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும் விவசாயிகள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராமமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story