நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாலங்கள், நடைமேம்பாலங்கள் கட்ட வேண்டும் : அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவு
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாலங்கள், நடைமேம்பாலங்களை கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் கடந்த மார்ச் மாதம் இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியானார்கள். முதல் கட்ட விசாரணையில் தனியார் கட்டுமான தணிக்கை நிறுவனம் அளித்த தவறான அறிக்கையால் தான் அந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் தணிக்கை நடத்திய அனைத்து பாலங்களிலும் வேறு நிறுவனம் மூலம் மறு கட்டுமான தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள பாலங்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. மும்பையில் 344 பாலங்கள் உள்ளன. இதில் 314 பாலங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், 30 பாலங்கள் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில் பல பாலங்களில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோபால் ஷெட்டி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆசிஸ் செலார், ராஜ் புரோகித், அமித் சாட்டம், மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கூட்டத்தில் அதிகாரிகளிடம் முதல்-மந்திரி பேசியதாவது:- மும்பையில் பாலங்கள் கட்டும் பணியில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம், ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். வெறும் 30 அல்லது 35 ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு பாலங்களை கட்டவேண்டாம். பாலங்கள், ரெயில்வே மேம்பாலங்கள், நடைமேம்பாலங்களை கட்டும் போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுங்கள். அப்போது அவை நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும்.
சீரமைப்பு பணிகள் நடந்து வரும் பாலங்களில் பணிகள் எப்போது முடியும், மாற்றுப்பாதை விவரங்களுடன் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். பாலங்கள் சீரமைப்பு பணிகள் மற்றும் மாற்றுப்பாதைகள் தொடர்பாக மக்களுக்கு தகவல் தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்குங்கள். தேவைப்பட்டால் பொதுமக்கள் தனியார் வாகனங்களை தவிர்த்து பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்க பெஸ்ட் பஸ் கட்டணத்தில் சலுகை வழங்க பரிசீலனை செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story