தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் கனிமொழியுடன் சந்திப்பு - புதிய ஆலோசனைக் குழுவை அமைக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர், கனிமொழியை சந்தித்து, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய ஆலோசனைக்குழுவை அமைக்க வலியுறுத்தி கடிதம் வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழியை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவரிடம் அளித்தனர். அந்த கடிதத்தில், ‘இந்திய அரசின் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவின்படி விமான நிலைய ஆலோசனைக் குழுவை தாங்கள் மறு சீரமைக்க வேண்டுகிறோம். விமானப்பயணிகள் விமானத்துறை நல்லுறவு, விமானப்பயணத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்த தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் கடைசி கூட்டம் கடந்த 5.7.2017 அன்று நடந்திருக்கிறது. புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் கூட்டத்தை ஜூலை மாதத்தில் நடத்திட ஆவன செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக முடிவின்படி விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு விமான நிலையம் அமைந்திருக்கும் தொகுதியின் உறுப்பினர் தலைவராக இருப்பார். அதன்படி தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு கனிமொழி எம்.பி. தலைவராக இருப்பார். தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர் மாற்றுத்தலைவராக இருப்பார். விமான நிலைய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக முறையே வணிகம், தொழில், போக்குவரத்துத் துறை சார்ந்த மூவரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து நியமிப்பார்.
சமூக, அரசியல் தளங்களில் இருந்து முக்கியமான மூன்று உறுப்பினர்களை விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நியமிப்பார். இதேபோல மேலும் மூன்று உறுப்பினர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுவார்கள். குழுவின் அமைப்பாளராக விமான நிலைய இயக்குனர் இருப்பார். சம்பந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவர்.
Related Tags :
Next Story