வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டி,
பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது 28 வயது மனைவியுடன் திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லி கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கவனித்துக்கொள்ள, அந்த பெண்ணின் 13 வயது தங்கையை பீகாரில் இருந்து வரவழைத்தார். இதையடுத்து திருப்பூர் வந்த அந்த சிறுமி, தனது அக்காளுடன் தங்கி குழந்தையை கவனித்து வந்தார்.
அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த அஜித் கர்ஷல் (வயது 26), சிறுமியிடம் அடிக்கடி பேசி, பழக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின்னர் சொந்த ஊருக்கு சென்ற அந்த வாலிபர் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வரவில்லை. இந்தநிலையில் சிறுமியின் வயிறு பெரியதாக இருப்பதை கவனித்த அவருடய அக்காள், அவரை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிறுமியிடம், அவருடைய அக்காள் விசாரித்த பொழுது அருகிலிருந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் கர்ப்பமானதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 13 வயதேயான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.