ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் ஆடிட்டர் கைது: நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பி ஓட்டம்


ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் ஆடிட்டர் கைது: நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 8:38 PM GMT)

பெங்களூருவில் ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் துபாய்க்கு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. அவரது ஆடிட்டரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான விவரம் அளிக்கும்படி போலீசாருக்கு அமலாக்கத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர், தனது நகைக்கடையில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் ஆயிரக்கணக்கானோர் பணம் முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.1,230 கோடியை மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் வெளியிட்டு இருந்த ஆடியோவில் சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்கிடம் ரூ.400 கோடி கொடுத்திருப்பதாகவும், பணத்தை திரும்ப கேட்டால் அவர் மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.

மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதால், அவரது நகைக்கடையில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 25 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து கமர்சியல்தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந்தேகவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மோசடி தொடர்பாக மன்சூர்கான் நகைக்கடையில் இயக்குனர்களாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மன்சூர்கான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் பெங்களூரு விமான நிலையத்தில் நின்ற மன்சூர்கானின் காரையும் போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில், கடந்த 8-ந் தேதியே தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு மன்சூர்கான் தப்பி சென்றிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை விமான நிலைய அதிகாரிகள் வழங்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக துபாய்க்கு சென்ற பிறகு, தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் தான் பேசிய ஆடியோவை மன்சூர்கான் வெளியிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இதற்கிடையில், மன்சூர்கான் நடத்தி வந்த நகைக்கடையில் ஆடிட்டராக இருந்த இக்பால்கானை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்துள்ளனர். மன்சூர்கான் தலைமறைவானதும் இக்பால்கானும் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரேசர் டவுனில் உள்ள வீட்டில் இக்பால்கான் இருப்பது பற்றிய தகவல் கிடைத்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான இக்பால்கானிடம், மன்சூர்கான் நகைக்கடையில் நடந்த பண பரிமாற்றம், வங்கி கணக்குகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 5-வது நாளாக நேற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சிவாஜிநகருக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களிடம் இருந்து கமர்சியல்தெரு போலீசார் புகார்களை பெற்றுக்கொண்டனர். நேற்று இரவு வரை ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூருவை போன்று பெலகாவி மாவட்டத்திலும் பணம் முதலீடு செய்து ஏமாந்த வாடிக்கையாளர்கள் நேற்று புகார் கொடுத்தனர்.

இதற்காக பெலகாவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று ஒரே நாளில் பெலகாவியில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்திருந்தனர்.

இதற்கிடையில், இந்த மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு குறித்த விவரங்களை அளிக்கும்படி கூறி கமர்சியல் தெரு போலீசாருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் தாங்களாக முன்வந்து கடிதம் எழுதி இருந்தனர். தற்போது இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் அமலாக்கத்துறை அனுப்பிய அந்த கடிதத்தை சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு, கமர்சியல் தெரு போலீசார் அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மன்சூர்கானுக்கு பெங்களூருவில் ரூ.500 கோடிக்கு சொத்துக்கள்

பெங்களூருவில் நகைக்கடை நடத்தி பொதுமக்கள் முதலீடு செய்திருந்த ரூ.1,230 கோடியுடன் மன்சூர்கான் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், பெங்களூருவில் மட்டும் மன்சூர்கானுக்கு ரூ.500 கோடிக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது சிவாஜிநகர், பார்க் ரோடு, பென்சன் ரோடு, திலக்நகர், ஜெயநகர், எச்.பி.ஆர் உள்பட 14 இடங்களில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன. இந்த ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்காக பெங்களூரு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்தை சொத்து வரியாக மன்சூர்கான் செலுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

Next Story