காரமடை அருகே சரக்கு வேன் மோதி ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாப சாவு


காரமடை அருகே சரக்கு வேன் மோதி ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 11:02 PM GMT)

காரமடை அருகே நடந்த விபத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள குமரன் குன்று கோவில் அருகே இருந்து சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றது. அந்த வேனை மூக்கனூரை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டிச்சென்றார். வேன் நேற்று மாலை காரமடை அருகே உள்ள விஜயநகர் வளைவில் திரும்பும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சந்துரு (வயது 19) என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு படுகாயம் அடைந்தார்.

ஆனால் அந்த வேன் அங்கிருந்து நிற்காமல் சென்றது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வேனை துரத்திச்சென்றனர். அவர்களிடம் பிடிபடாமல் இருக்க டிரைவர் குமார் வேகமாக ஓட்டினார். அந்த வேன் தேக்கம்பட்டியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே தேக்கம்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான நடராஜ் (45) மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது அந்த வேன் திடீரென்று நடராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதுபோன்று இந்த வேன் மோதியதில் படுகாயம் அடைந்த சந்துருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விபத்தில் பலியான ஆசிரியர் நடராஜ் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தார். அவருக்கு வனிதாதேவி என்ற மனைவியும், நேவியா (13) என்ற மகளும் நகுலன் (10) என்ற மகனும் உள்ளனர்.

Next Story