கடன் வாங்கி மோசடி, பெண் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - கோவை கோர்ட்டு உத்தரவு


கடன் வாங்கி மோசடி, பெண் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - கோவை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கோவை,

கோவையை அடுத்த போத்தனூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 41). கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் 2-ம் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் அம்சவேணி (35). இவர் லோகநாதனிடம், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.6 லட்சம் கடன் வாங்கினார். மேலும் அவர், லோகநாதனின் தாய் ருக்மணி நடத்தி வந்த ஏலச்சீட்டில் ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி உள்ளார்.

பின்னர் அந்த தொகையை செலுத்தாமல் பணம் இல்லாத காசோலையை கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி தரக்கோரி லோகநாதன் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து குற்றப்பிரிவு தெற்கு உதவி ஆணையர் விசாரித்து வந்தார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியிடம் ஆஜரான அம்சவேணி, தான் லோகநாதனிடம் கடன் பெற்றுக்கொண்டதையும், ஏலச்சீட்டு தொகை பாக்கி உள்ளதையும் ஒப்புக்கொண்டார்.

இந்த பிரச்சினையை கோர்ட்டில் சட்டரீதியாக தீர்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.7-வது கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டராஜா, பெண் போலீஸ் அம்சவேணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். மேலும் அதன் மீதான விசாரணை அறிக்கையை வருகிற 19-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவும் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Next Story