நீட் தேர்வு, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கி.வீரமணி வேண்டுகோள்


நீட் தேர்வு, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கி.வீரமணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 6:28 PM GMT)

நீட் தேர்வு, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் இதுவரை பெற்று வந்த மருத்துவ வசதியை பறிக்கும் வகையில் நீட் தேர்வை நுழைத்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் வரும்போதே எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 1 ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் 2 மசோதாக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா என்ன ஆனது என தெரியவில்லை.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா? அல்லது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதா? என கேள்வி கேட்கக்கூடிய துணிச்சல் அ.தி.மு.க. அரசுக்கு இல்லை.

நீட் தேர்வினால் இதுவரை 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்விலும் குளறுபடி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த தேர்வில் இருந்து விலக்கு பெறுவதை தவிர வேறு வழியில்லை. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது அதிகமான அளவு அரசு மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு, அதிக இடங்களும் ஏற்படுத்தப்பட்டன. வட மாநிலங்களில் இருந்து வந்து அந்த இடங்களை எல்லாம் அனுபவித்து கொண்டு இருக்கின்றனர். நமது பிள்ளைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்து இருக்கும். ஆனால் இப்போது எம்.பி.க்கள் போராட வேண்டிய இடத்தில் உள்ளனர். டெல்லிக்கு சென்று இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் இருந்து நிதி, தமிழக உரிமையை பெற்றுத்தர வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்க வேண்டும். சமூக நீதி, இருமொழி கொள்கையை காக்க வேண்டும்.

இந்தி, சமஸ்கிருத திணிப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தேசிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்கக்கூடாது. நீட் தேர்வு, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம், சட்டசபை கூட்டத்தை தமிழக அரசு கூட்டி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story