மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் நிற்காமல் செல்வதால் பிரச்சினை: திருபுவனையில் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தனியார் பஸ்சை திருபுவனையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மறித்து சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருபுவனை,
புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மதகடிப்பட்டு சந்திப்பு பகுதி. புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சில தனியார் பஸ்கள் மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ செய்வதில்லை. அது தொடர்பாக பல முறை பஸ் பயணிகளுக்கும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு தனியார் பஸ் நேற்று மாலை விழுப்புரத்துக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் திருபுவனை வட்டார காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.பி.வெங்கடேசன் ஏறினார்.
அவர் மதகடிப்பட்டு சந்திப்பு பகுதிக்கு செல்ல பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார். அப்போது பஸ் கண்டக்டர், மதகடிப்பட்டு சந்திப்பில் பஸ் நிற்காது என்றும், எனவே பஸ்சில் இருந்து இறங்கும்படியும் வெங்கடேசனிடம் கூறினார்.
இந்த பிரச்சினையில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வந்துவிட்டது. வழியிலேயே கண்டக்டர் வலுக்கட்டாயமாக வெங்கடேசனை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் அவர் ஆத்திரம் அடைந்தார். பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்டது குறித்தும், பஸ் மதகடிப்பட்டு சந்திப்பில் நிற்காமல் செல்லும் என்று கண்டக்டர் கூறியது குறித்தும் வெங்கடேசன் மொபைல் போன் மூலம் தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெங்கடேசனை, இறக்கி விட்ட பஸ் திருபுவனைக்கு சென்றது. அங்குள்ள சென்ட்ரல் சினிமா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வெங்கடேசனின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பொது மக்கள் என 100–க்கும் மேற்பட்டவர்கள் அந்த பஸ்சை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து சிறை பிடித்தனர். அதில் இருந்த பயணிகளையும் கீழே இறக்கிவிட்டு வேறு பஸ்சில் செல்லும்படி கூறினார்கள்.
மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வெங்கடேசனை ஏன் வலுக்கட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டீர்கள், மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் பஸ்சை ஏன் நிறுத்துவதில்லை? மேலும் மதகடிப்பட்டு சந்திப்பு, திருவாண்டார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்களை பஸ்களில் ஏன் ஏற்றுவதில்லை? என்று பலவாறாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் அந்த பஸ்சில் கைகளால் அடித்ததாகவும், சிலர் கண்ணாடியை உடைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் அங்கு பதற்றமும், பரபரப்பு நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அந்த பஸ்சை பாதுகாப்பாக திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மதகடிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வதால் ஏற்படும் பிரச்சினை குறித்து பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பஸ் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருபுவனையில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.