‘கோவிந்தா’ கோஷம் முழங்க பெருமாள் மலையில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


‘கோவிந்தா’ கோஷம் முழங்க பெருமாள் மலையில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் பெருமாள் மலையில் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

துறையூர்,

பக்தர்களால் தென் திருப்பதி என்று போற்றப்படுகிற பெருமாள் மலையில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம் முதலானவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி தேரில் எழுந்தருளினார். காலை 8 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘கோவிந்தா... கோவிந்தா...’

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருமாள் மலையை சுற்றியுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனியார் சமூக நல அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டை செயல் அலுவலர் ஜெயா செய்திருந்தார்.

Next Story