கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், மந்திரியை பாதுகாக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு


கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், மந்திரியை பாதுகாக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடையில் நடந்த ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், மந்திரியை பாதுகாக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சிப்பதாக ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.1,230 கோடியுடன், மன்சூர்கான் தலைமறைவாகி விட்டார். இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனந்தராவ் சர்க்கிளில் நேற்று முன்தினம் பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்றும் பா.ஜனதாவினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில், பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில், மன்சூர்கான் நகைக்கடையில் முதலீடு செய்து ஏமாந்த சிலரும் கலந்துகொண்டு பேசினர்.

முன்னதாக, போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஷோபா எம்.பி. பேசியதாவது;-

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்களிடம் முதலீடாக பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாயுடன் மன்சூர்கான் தலைமறைவாகி உள்ளார். இந்த மோசடியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் தொடர்பு உள்ளது. மோசடியில் ஈடுபட்டுள்ள மன்சூர்கானுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்று மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார்.

மந்திரி ஜமீர் அகமதுகானுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், மந்திரியை பாதுகாக்க இந்த அரசு முயற்சிக்கிறது. இதற்காக தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாமல், சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு விசாரித்தால் இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள், மந்திரியை காப்பாற்றி விடலாம் என்று குமாரசாமி நினைக்கிறார்.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் வலியுறுத்துவோம். நாடாளுமன்றத்திலும் இந்த மோசடி குறித்து பா.ஜனதா எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம். இவ்வாறு ஷோபா எம்.பி. பேசினார்.


Next Story