ஈரோடு பஸ்நிலையத்தில் பரபரப்பு, ஆள்மாறாட்டத்தால் லாரி டிரைவருக்கு சரமாரி கத்திக்குத்து - சமையல்காரர் கைது
ஈரோடு பஸ் நிலையத்தில், ஆள்மாறாட்டத்தால் லாரி டிரைவரை சரமாரியாக கத்தியால் குத்திய சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பனங்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயம். இவருடைய மகன் ஏசுராஜ் (வயது 32). இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி டிரைவராக வேலைசெய்து வருகிறார். ஏசுராஜ் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சங்ககிரிக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பினார். அவர் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு நேற்று காலை வந்தார். பின்னர் ஏசுராஜ் சங்ககிரிக்கு செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி ஈரோடு பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சேலம் பஸ்சில் ஏறுவதற்காக அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஏசுராஜின் மீது சரமாரியாக குத்தினார். இதில் ஏசுராஜின் முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஏசுராஜ் சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அங்கிருந்த பெண்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் பயணிகள் சிலர் ஓடோடி வந்து படுகாயம் அடைந்த ஏசுராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஏசுராஜை கத்தியால் குத்தியவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அனுமன்பள்ளி அந்தரம்பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தைசாமி (46) என்பதும், சமையல்காரரான இவருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், பஸ் நிலையத்தில் நடந்து சென்ற ஏசுராஜை பார்த்தபோது குழந்தைசாமிக்கு தன்னுடன் தகராறில் ஈடுபட்ட நபரை போன்று தோன்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தைசாமியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story