மேகதாது அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும் - மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் குமாரசாமி வலியுறுத்தல்


மேகதாது அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும் - மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2019 5:00 AM IST (Updated: 16 Jun 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனால் மேகதாதுவில் புதிய அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்திடம் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கர்நாடகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, மத்திய நீர்வளத்துறை மந்திரியான கஜேந்திரசிங் செகாவத்தையும் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார்.

அப்போது மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி, மகதாயி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் சேகாவத்துடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு கட்ட உள்ள புதிய அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்என்று வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் ஒரு மனுவையும் முதல்-மந்திரி குமாரசாமி கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய அணை கட்டுவதன் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் கிடைக்கும். மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் தான் மேகதாது அணை கட்டப்படுகிறது. அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

கர்நாடக அரசு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, மத்திய அரசின் அனுமதிக்காக வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு தமிழ்நாட்டின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதனால் கூடிய விரைவில் மேகதாதுவில் புதிய அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுபோல, மகதாயி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு 13.2 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிடாதால், கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே மகதாயி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். 3 மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத்திடம் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தினார். மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரியிடம் குமாரசாமி கோரிக்கை மனு வழங்கினார்.


Next Story