சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவார் : சிவசேனா மந்திரி சொல்கிறார்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவார் என சிவசேனா மந்திரி ராம்தாஸ் கதம் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் 1995-ம் ஆண்டு சிவசேனா ஆட்சிக்கு வந்தது. அப்போது அந்த கட்சியுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதாவைவிட அதிக இடங்களை கைப்பற்றி இருந்தது. மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா பெரிய அண்ணனாக இருந்து வந்தது.
இந்தநிலையில் 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலைமை தலைகீழானது. தனித்து போட்டியிட்ட பா.ஜனதா சிவசேனாவைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்-மந்திரி பதவியை கைப்பற்றியது. எனவே விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி முதல்-மந்திரி நாற்காலியை பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பில் சிவசேனா இருப்பதாக தகவல்கள் பரவின.
மேலும் முதல்-மந்திரி பதவிக்கு சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரேயை கொண்டுவர அக்கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகின. இந்தநிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியை சேர்ந்த மாநில சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது:-
மந்திரிசபை விரிவாக்கம் நடந்தால் ஆதித்ய தாக்கரே துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் முதல்-மந்திரி ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஆதித்ய தாக்கரேயிடம் கேட்ட போது அவர் கூறுகையில், “மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் வறட்சி நிவாரணப்பணிகள் மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்க செய்ய வேண்டிய வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.
Related Tags :
Next Story