பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி


பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே பஸ் மோதி நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஆணைக்கோவில் கிராமம் செட்டி தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மகன் ஆதித்யன் (வயது22). இவர் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா மகன் மாரிமுத்து (20), ராமமூர்த்தி மகன் ஆதிஷ் (20). மாரிமுத்து நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஆதிஷ் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

ஆதித்யன், மாரிமுத்து, ஆதிஷ் ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். நேற்று மாலை 3 பேரும் காரைக்கால் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ஆதித்யன் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சம்பவ இடத்தில் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதித்யன், மாரிமுத்து, ஆதிஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

டிரைவர் கைது

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் வாய்மேடு பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவரை கைது செய்தனர். விபத்தில் 3 நண்பர்கள் பலியான சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story