வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்


வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர்
x
தினத்தந்தி 17 Jun 2019 5:00 AM IST (Updated: 17 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர், மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தேன்மொழி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் கொடைரோடு அருகே உள்ள ஊத்துப்பட்டி, மெட்டூர், காமலாபுரம், சக்கையநாயக்கனூர், சல்லிபட்டி, பூதிப்புரம் உட்பட பல ஊர்களுக்கு சென்று, வாக்காளர்களுக்கு தேன்மொழி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.

அப்போது ஊத்துப்பட்டியில் பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் விலைக்கு குடிநீர் வாங்கி வருவதாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதேபோல் மெட்டூரில் பகுதிநேர ரே‌ஷன்கடை, நான்கு வழிச்சாலையில் இருந்து இணைப்பு சாலை கேட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தேன்மொழி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

இதற்கிடையே கொடைரோடு அருகே அழகம்பட்டியில் நன்றி தெரிவிக்க சென்ற தேன்மொழி எம்.எல்.ஏ. வாகனத்தை, அ.தி.மு.க பிரமுகர் செல்வம் தனது மனைவியுடன் சேர்ந்து வழி மறித்தார். பின்னர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை பார்த்த தனது மனைவியை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு தேன்மொழி எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story