முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி தொழிலாளி சாவு


முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 16 Jun 2019 10:45 PM GMT (Updated: 16 Jun 2019 7:15 PM GMT)

நம்பியூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த ராயர்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவருடைய மகன் பொன்னுசாமி (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் முயல் வேட்டைக்கு சென்றார். புலவபாளையம் பகுதியில் சென்றபோது ஒரு முயல் ஓடியது. உடனே அந்த முயலை துரத்திக்கொண்டு அவர் ஓடினார்.

ஆனால் அந்த முயல் அந்த பகுதியில் உள்ள நூற்பாலைக்குள் சென்றுவிட்டது. உடனே முயலை பிடிப்பதற்காக அவர் நூற்பாலையில் உள்ள மதில் சுவரில் ஏறினார். அப்போது அந்த சுவரின் வழியாக சென்ற டி.வி. கேபிள் ஒயரில் அவருடைய கால் சிக்கி கொண்டது.

இதனால் அவர் கீழே விழாமல் இருப்பதற்காக மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக பிடித்துவிட்டார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கியதில் பேண்ட் தீப்பிடித்து எரிந்ததுடன், மதில் சுவரில் உள்ள கம்பியில் கருகிய நிலையில் அவருடைய உடல் தொங்கி கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனே இதுபற்றி மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் மின்சார வினியோகத்தை நிறுத்தினர்.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story