பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 10:30 PM GMT (Updated: 16 Jun 2019 7:24 PM GMT)

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்,

முன்பு ஒரு காலத்தில் திருஞானசம்பந்தர் தனது அடியார்களுடன் காவிரியின் தென்கரையில் உள்ள சிவன் தலங்களை தரிசித்து வந்தார். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அருள்பாலித்து வரும் தேனுபுரீஸ்வரரை தரிசிக்க வரும்போது நண்பகல் நேரமாகி விட்டது. கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்ட திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பூதகணங்கள் மூலமாக முத்துப்பந்தல் அமைத்து கொடுத்து, அவரை வரவேற்றதாக தலவரலாறு கூறுகிறது. இதை நினைவுகூரும் விதமாக தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் முத்துப்பந்தல் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் அருளும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடந்தது.

விழாவில் நேற்றுமுன்தினம் முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துசின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தலில் திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் மடாலயத்தில் இருந்து திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதி உலாவாக புறப்பட்டு, திருமேற்றிழிகை கைலாசநாதர் கோவில், திருசத்திமுற்றத்தில் உள்ள சக்திவனேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்றார். பின்னர் தேனுபுரீஸ்வரர் கோவிலை வந்தடைந்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story