ஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி


ஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதே பா.ஜ.க.வின் லட்சியம் ஆகும். புதுவை யில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க. உறுதி அளித்தது.

புதுச்சேரி,

புதுவை பாரதீய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி செயற்குழு கூட்டம் நேற்று காலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் விஜயபூபதி, பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் 1 லட்சத்திற்கும் அதிகமாக ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ உதவிகள் பெற முடியும். இதே போல் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இது குறித்து மத்திய உள்துறை மந்திரி, துணை ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

பா.ஜ.க. சார்பில் வருகிற 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்பட உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 7 வரை சிறிய யோகா நிகழ்ச்சி நடைபெறும். தற்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில முதல்- அமைச்சர்களில் பெரும்பாலானோர் பா. ஜ.க.வினர் தான். இது ஒரு மாநாடு போல நடந்தது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் இலக்கு 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை கொண்டு வருவது தான். தற்போது மக்கள் பலர் தாமாகவே விரும்பி பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். அதற்கு காரணம் பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் எதுவும் இல்லை. மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் லட்சியம். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இன்றும் 5 ஆண்டுகளில் பத்திர பதிவுதுறை முழுவதும் ஆன்-லைன் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஆன்-லைன் ஆக மாற்றப்பட உள்ளது.

புதுவை மாநிலத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. புதுவையில் ஆட்சியை பிடிக்கும். அதன் பின்னர் புதுவையில் மத்திய அரசு சார்பில் 3 தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும். அதன் மூலம் படித்து முடித்த ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை கிடைக்கும். கட்சி நிர்வாகிகளாகிய நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க உதவியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story