சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ ஆணையாளர் எச்சரிக்கை


சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடைகளுக்கு ‘சீல்’ ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2019 3:30 AM IST (Updated: 17 Jun 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சேலம்,

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை செய்தது. ஆனால் தமிழக அரசின் உத்தரவை சில நாட்கள் மட்டுமே கடைக்காரர்கள் மதித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

அதன்பிறகு வழக்கம்போல் கடைகளில் பிளாஸ்டிக் தம்ளர், கேரி பேக்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உடனடியாக அபராதம் விதிக்கும் முறை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அபராதம்

சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை கண்டுபிடிக்க மண்டலம் வாரியாக அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், கடைகள், மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் அமல்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதம் வசூலிக்கும் முறை இன்று முதல் தீவிரமாக தொடங்கப்பட உள்ளது.

கடைக்கு சீல்

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறுகையில், சேலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக தனிக்குழு ஏற்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ேமலும், 4 மண்டலங்களிலும் இதுவரை ஆயிரம் டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு உத்தரவுப்படி சிறிய கடைகள், பெரிய கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகு ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும். இதனால் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட வேண்டாம். எனவே, அரசின் இந்த முயற்சிக்கு வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார்.

Next Story