அரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர்களிடம் ஏராளமானோர் மனு


அரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர்களிடம் ஏராளமானோர் மனு
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 7:49 PM GMT)

அரியலூர், பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர்களிடம் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது கலெக்டரிடம் கூத்தனூர் கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், கூத்தனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப்பகுதியில் கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க சென்று வருகின்றனர். கழிப்பறை அமைக்க தெருவில் பொது இடம் உள்ளது. எனவே அந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் கழிப்பறை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பூலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களது பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவினை கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

புதுநடுவலூர் கிராம இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் கடந்த 7 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட மின்மாற்றி செயல்படாமல் உள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் மின்மாற்றி பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கீழமாத்தூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலை பணியாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்கள் 11 வருடங்களாக ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 12 மாதங்களாக அந்த நிறுவனம் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அந்த சிமெண்டு நிறுவனத்தில் இருந்து எங்களது சம்பளத்தை பெற்றுத்தருமாறு கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் உரிமையாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு கல்லாங்குளத்தில் அமைந்துள்ள 80-க்கும் மேற்பட்ட குவாரிகள் நீண்ட காலமாக ஏலத்திற்கு விடப்படாமல் உள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளன. இவை அனைத்தும் மூல பொருட்கள் முழுமையான அளவில் கிடைக்காமல், சரி வர இயக்கப்படாமல் உள்ளன. இதனால் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசுக்கு இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஏலம் விடப்படாத குவாரிகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 340 கோரிக்கை மனுக்களை கலெக்டர் விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 750 மதிப்பில் இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story