வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மனித சங்கிலி போராட்டம் திரளான டாக்டர்கள் பங்கேற்பு


வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மனித சங்கிலி போராட்டம் திரளான டாக்டர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 8:14 PM GMT)

குமரி மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டாக்டர்கள் நேற்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை போராட்டம் நடக்கிறது. அதாவது 24 மணி நேரம் போராட்டம் நடக்கிறது.

இதையொட்டி நேற்று ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்தனர். அதே சமயம் அவசர சிகிச்சைகள் மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடந்தன.

குமரி மாவட்டத்தில் சுமார் 400 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இங்கு டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். அரசு ஆஸ்பத்திரிகளிலும் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாததால் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் பணிகளில் ஈடுபட்டு இருந்த டாக்டர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

டாக்டர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்ட தலைவரும், மாநில பொறுப்பாளருமான அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்பாலன், இந்திய மருத்துவர் சங்க தேசிய துணை செயலாளர் ஜெயலால் மற்றும் டாக்டர்கள் முரளிதரன், முத்துகுமார், ராஜசேகர் உள்பட திரளான டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ- மாணவிகளும் திரளாக கலந்துகொண்டு ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிகளை செய்தனர்.

இதுபற்றி டாக்டர் அருள்பிரகாஷ் கூறுகையில், “தேசிய அளவிலான மருத்துவ பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கொல்கத்தாவில் டாக்டர்கள் நடத்தும் போராட்டத்துக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும்“ என்றார். முன்னதாக இந்திய மருத்துவர் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். 

Next Story