வெவ்வேறு விபத்துகளில், புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில், புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2019 4:00 AM IST (Updated: 18 Jun 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை மகராஜநகர் வசந்தன் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருடைய மகன் அருண் நயினார் (வயது 31). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது.

புதுமாப்பிள்ளையான அருண் நயினார் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண் நயினார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை பட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலா (70). இவர் நேற்று முன்தினம் இரவு சுத்தமல்லியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார். அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள குலசேகரநல்லூரை சேர்ந்தவர் நட்டார் (40). பால் வியாபாரி. இவர் சம்பவத்தன்று மொபெட்டில் பால் கேனுடன் பொட்டல் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மொபெட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நட்டார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நட்டார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story