காரைக்குடி அருகே இருதரப்பினர் மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் - கல் வீசப்பட்டதில் 58 பேர் கைது, துணை சூப்பிரண்டு காயம்


காரைக்குடி அருகே இருதரப்பினர் மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் - கல் வீசப்பட்டதில் 58 பேர் கைது, துணை சூப்பிரண்டு காயம்
x
தினத்தந்தி 18 Jun 2019 5:30 AM IST (Updated: 18 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே இருதரப்பினர் மோதலில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் ஒரு தரப்பினர் மயானத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக அந்த பகுதியை சுத்தப்படுத்தி முள்வேலி அமைத்திருந்தனர். இந்தநிலையில் மர்மநபர்கள் முள்வேலியை அகற்றி, அங்கிருந்த ஒரு கல்லறையை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சுப்பையா என்பவர் பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் மற்றொரு தரப்பை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் வசந்த மாளிகை பஸ்நிறுத்தம் அருகே இருதரப்பை சேர்ந்தவர்களும் சந்தித்த போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை, கல், பாட்டில் போன்றவற்றால் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்தின் தம்பி சுப்பையா, அவரது மகன் ஹரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. சுப்பையா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்களும் மறுபடியும் நேற்று முன்தினம் இரவில் பயங்கரமான ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையொட்டி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் வீடுகளுக்குள் இருந்து போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. மேலும் 2 பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் உள்பட 4 போலீசாரும் காயம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையாக தடியடி நடத்தி அைனவரையும் கலைத்தனர்.

மேலும் வீடுகளில் மறைந்திருந்து கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவர் உள்பட 30 பேரையும், மற்றொரு தரப்பில் சீனி என்பவர் உள்பட 28 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தையொட்டி அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story