தாராபுரம் அருகே பரபரப்பு: கள்ளக்காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த வாலிபர் சாவு
தாராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.காளிப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் அஜீத்குமார் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி துர்கா தேவி. இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. அஜீத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மணிமேகலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். இவர்களுக்கு 14 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துபோனார்.
கணவனை இழந்த மணிமேகலை தனது மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அஜீத்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளும் ஒரே பகுதியில் இருப்பதால், அடிக்கடி சந்தித்து பேசுவற்கு வசதியாகிப்போனது. இந்த பழக்கமானது நாளடைவில், அவர்களிடையே வயது வித்தியாசம் கூட பார்க்காமல், கள்ளக்காதலாக மாறிவிட்டது.
இதற்கிடையில் மணிமேகலையின் மீது ஏற்பட்ட மோகத்தால் அஜீத்குமார் தனது குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் துர்காதேவியின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக அஜீத்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அதையடுத்து துர்காதேவியின் குடும்பத்தினர் மணிமேகலையையும், அஜீத்குமாரையும் கண்டித்துள்ளனர். அதன் பிறகு கடந்த சில நாட்களாக அஜீத்குமாரும், மணிமேகலையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மனவேதனை அடைந்து தவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது இனி வாழ்க்கையில் நாம் இருவரும் ஒன்று சேர முடியாது. மரணத்திலாவது ஒன்று சேருவோம் என தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளனர். அதன் பிறகு இரவு வீட்டில் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் மணிமேகலையும், அஜீத்குமாரும் சேர்ந்து, அருகே இருந்த தனியார் நாற்றுப்பண்ணைக்கு பின்புறம் இருந்த காட்டிற்குச் சென்று, இருவரும் விஷம் குடித்துள்ளனர். அதன் பிறகு இருவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அஜீத்குமாரும், மணிமேகலையும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து அவர்களை மீட்டு, ஆன்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜீத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மணிமேகலைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிமேகலையின் செயல்பாடு அந்த பகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையத்து அவருக்கு பலரும் அறிவுரை கூறினார்கள். அஜீத்குமாருக்கு குடும்பம் இருக்கிறது. உன்னைவிட அவருக்கு வயது குறைவு. அவருடைய வாழ்க்கையில் நீ தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய மகனை கூட நினைத்துப் பார்க்காமல்அஜீத்குமாருடன் சேர்ந்து விஷம் அருந்தி உள்ளார். இதில் அஜீத்குமார் இறந்தவிட்ட நிலையில், மணிமேகலைக்கு மட்டும் உயிருடன் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிமேகலையை ஆம்புலன்சில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல புறப்பட்டபோது. அஜீத்குமாரின் உறவினர்கள், ஆம்புலன்சை வெளியில் செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்சை மீட்டு கோவைக்கு அனுப்பி வைத்தனர்.