ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பும் பணத்தில் ரூ.50½ லட்சம் கையாடல்; 4 பேர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பும் பணத்தில் ரூ.50½ லட்சத்தை கையாடல் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
சேலம் விவேகானந்தா ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் பி.சாம் மகேஷ்குமார், நிர்வாக பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்பட்ட பணத்தின் விவரங்களை தணிக்கை செய்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
அதன்படி ஈரோடு காந்திஜி ரோட்டில் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.8 லட்சமும், மற்றொரு எந்திரத்தில் ரூ.6 லட்சமும், ஈரோடு மொசுவண்ண வீதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 500, பெருந்துறை கோவைரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சமும், மற்றொரு எந்திரத்தில் ரூ.11½ லட்சமும், பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.11 லட்சமும், ஈரோடு பெருந்துறை ரோடு பழையபாளையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.6½ லட்சமும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 78 ஆயிரத்து 500 கணக்கில் வராமல் இருந்தது தெரியவந்தது.
இதுபற்றிய தகவலை கிளை மேலாளர் சாம் மகேஷ்குமார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்தார். அதன்பேரில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பியபோது பொறுப்பில் இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பூலக்காடு கணபதிநகரை சேர்ந்த ஜெகநாதனின் மகன் அழகேசன் (வயது 29), சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (31) ஆகியோரை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், அந்த பணத்தை நிறுவனத்தின் ஊழியரான சேலம் சாமிநாதபுரம் கவுரம்மா காலனியை சேர்ந்த மனோகரனின் மகன் முருகானந்தம் (29) என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டனர்.
அதன்பின்னர் கையாடல் செய்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக 3 பேரும் உறுதி அளித்தனர். இதனால் அவர்களிடம் இருந்து உறுதிமொழி பத்திரத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 29–ந் தேதி வரை 8 தவணைகளாக அவர்கள் ரூ.5 லட்சத்து 12 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.50 லட்சத்து 66 ஆயிரத்து 500 கொடுக்கவில்லை.
எனவே கையாடல் செய்த பணத்தை மீட்டுத்தரக்கோரி நிறுவனத்தின் கிளை மேலாளர் சாம் மகேஷ்குமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அழகேசன், பிரகாஷ், முருகானந்தம் ஆகியோர் கையாடல் செய்த பணத்தை சேலம் மாவட்டம் அரிசிபாளையம் தாமோதிரன் வீதியை சேர்ந்த தங்கவேலின் மகன் வினோத் என்கிற திருமுருகன் (29) என்பவர் மோசடியாக பெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அழகேசன், பிரகாஷ், முருகானந்தம், வினோத் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.