கதிரடிக்கும் களம் இல்லாமல் விவசாயிகள் பரிதவிப்பு; சாலைகளை பயன்படுத்துவதால் விபத்து அபாயம்


கதிரடிக்கும் களம் இல்லாமல் விவசாயிகள் பரிதவிப்பு; சாலைகளை பயன்படுத்துவதால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் சாலைகளை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ள மாவட்டம் ஆகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். மழை பொய்த்து அணைகள், கண்மாய்கள் வறண்டாலும் கிணறு, ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ளும் பகுதிகள் பல உள்ளன.

குறிப்பாக கூடலூர், கோம்பை, தேவாரம், போடி, கூழையனூர், தர்மாபுரி, பூமலைக்குண்டு, நாகலாபுரம், கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி போன்ற பகுதிகளிலும், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளிலும் பயறு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணற்றுப் பாசனத்தை நம்பியும், மானாவாரியாகவும் பயிர் சாகுபடி நடக்கிறது.

ஆனால், மாவட்டத்தில் பல கிராமங்களில் கதிரடிக்கும் களம் இல்லை. சில கிராமப்புற பகுதிகளில் களம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை பராமரிப்பு இன்றி சிதிலம் அடைந்து கிடக்கிறது. சில இடங்களில் போதிய அளவில் களம் வசதி இல்லை.

இதனால் மக்காச்சோளம், எள், உளுந்து, கம்பு, கேழ்வரகு, வெள்ளைச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கதிரடிக்க களம் இன்றி சாலைகளையே விவசாயிகள் உலர வைக்கும் களமாக பயன்படுத்தும் நிலைமை உள்ளது. பத்ரகாளிபுரம், காமராஜபுரம், தர்மாபுரி, தாடிச்சேரி, நாகலாபுரம், காமாட்சிபுரம் உள்பட பல இடங்களில் சாலைகளில் பயிர்களை கொட்டி உலர வைக்கும் நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க முடிகிறது.

சாலைகளை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி களம் வசதி இல்லாத இடங்களில் தேவையான அளவுக்கு களம் அமைத்துக் கொடுக்கவும், களம் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
1 More update

Next Story