விருதுநகரில் திருட்டுக்காரில் துப்பாக்கியுடன் திரிந்த 3 பேரை விரட்டிச் சென்ற போலீசார், பரபரப்பு தகவல்
திருட்டுக்காரில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் திரிந்த 3 பேரை போலீசார் விரட்டினர். பின்னர் அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
விருதுநகர்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் அருகே இடைச்செவல் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வில் அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த 3 பேர் காருக்கு டீசல் போட்டதுடன் அங்கிருந்த டயர் ஷோரூமில் இருந்து ஒரு புது டயரை திருடி காருக்குள் போட்டனர்.
அங்கிருந்த ஊழியர்கள் இதைக்கண்டு சத்தம் போடவே காரில் இருந்த 3 பேரும் திருடிய டயருடன் தப்பினர். இது பற்றி உடனடியாக கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்களால் காரை பிடிக்க முடியாததால் விருதுநகர்–சாத்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வேகமாக வந்த அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால் நெடுஞ்சாலை ரோந்துபோலீசாரும் அந்த காரை விரட்டி வந்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே வந்த போது அந்த கார், அங்குள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதி வழியாக திரும்பியது.
பின்னர் அந்த வழியாக செல்ல முடியாமல் கார் சிக்கிக் கொண்டதால் அதில் இருந்த 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பின்னால் வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரை திறந்து சோதனையிட்டபோது காரில் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது ‘ஏர்பிஸ்டல்’ வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
உடனே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரையும், அந்த துப்பாக்கியையும் கைப்பற்றி சூலக்கரை போலீசில் ஒப்படைத்தனர். காரில் கே.எல். என்ற எழுத்துடன் இருந்த பதிவு எண் கே.ஏ. என்று மாற்றப்பட்டு இருந்தது.
எனவே காரில் வந்தவர்கள் இந்த காரையும் எங்கோ திருடி வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
எனவே திருட்டு காரில் நள்ளிரவில் துப்பாக்கியுடன் வந்தவர்கள் யார்? அவர்கள் எங்கு செல்வதற்காக காரில் வந்தனர்? என்பது பற்றிய விவரங்களை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.