மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி


மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Jun 2019 5:30 AM IST (Updated: 19 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியான வாலிபரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை,

மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (வயது35). சிம்மக்கல் பகுதியில் வாகன டயர் கடை வைத்திருந்தார். அவர் கடந்த 15-ந் தேதி இரவு, தனது கடையை அடைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர் சரவணக்குமாரும் உடன் சென்றார். இவர்கள் சிம்மக்கல் தைக்கால் பாலத்தில் சென்ற போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் இவர்களது வாகனத்தை தடுத்தனர்.

ஆனால் விவேகானந்த குமார், வாகனத்தை முன்னோக்கி இயக்கினார். எனவே அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் லத்தியை வீசினார். அந்த லத்தி விவேகானந்தகுமார் மீது விழுந்ததாக தெரிகிறது. அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையிலும், உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. காயங்களுடன் அவரும், நண்பர் சரவணக்குமாரும் மீட்கப்பட்டு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவேகானந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவேகானந்த குமாரின் மனைவி கஜபிரியா மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு அளித்தனர். அதே வேளையில் விவேகானந்தகுமார் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை பெற உறவினர்கள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில் விவேகானந்தகுமாரின் மனைவி கஜ பிரியா, துக்கம் தாங்காமல் நேற்று காலையில் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டுள்ளார். இதை கவனித்த அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விவேகானந்தகுமார் உயிரிழந்துவிட்ட நிலையில், அவருடைய மனைவி கஜபிரியா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதால் இவர்களுடைய குழந்தை பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் விவேகானந்தகுமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர். போலீசாரை பாதுகாக்க அரசு முயல்கிறது என்றும், அப்பாவி வாலிபரின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதுடன், நிவாரணம் தரவும் மறுக்கிறது என குற்றம்சாட்டினர். போலீசாரின் அஜாக்கிரதையால் உயிரிழப்பு ஏற்பட்டதுடன், ஒரு குடும்பமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.

எனவே தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர். இதனால் இரவான பின்னரும் போராட்டம் தொடர்ந்தது.

Next Story