திருவள்ளூர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி வெல்டர் கைது


திருவள்ளூர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி வெல்டர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 3:48 AM IST (Updated: 19 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த வெல்டர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு வீராணத்தூர் கிராமம் பாரதி தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 33). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ராகுல் என்பவருக்கு வேலை வேண்டி விண்ணப்பித்து கொண்டிருந்தார். இதை அறிந்த வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை ஓச்சேரி மெயின் ரோட்டில் வசிக்கும் வெல்டரான வெங்கடேஷ் (33) தனக்கு அரக்கோணத்தில் உள்ள கடற்படை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை தெரியும்.

அவர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறினார். ரூ.3 லட்சம் கொடுத்தால் உடனடியாக வேலையை பெற்றுத்தருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மேனகா, வெங்கடேஷ் தெரிவித்தது போல் ரூ.3 லட்சத்தையும், அசல் கல்வி சான்றிதழ்களையும் வெங்கடேசிடம் கடந்த 2017-ம் ஆண்டு கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் இதுநாள் வரை வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் ஏமாற்றப்பட்ட மேனகா பலமுறை வெங்கடேசை நாடி வேலை வாங்கித் தருமாறு கேட்டார். இல்லை எனில் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஒருகட்டத்தில் வெங்கடேஷ் எந்த பதிலும் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து மேனகா திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன் சாரதி, வாசுதேவன், சுமன் மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த வெங்கடேசை தேடிவந்தனர். நேற்று முன்தினம் அரக்கோணம் அருகே பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story