திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 7:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரசாந்த் (வயது 21). இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கழிப்பறை ஒப்பந்ததாரர். நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சென்றார்.

அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு சாவுக்காக பாதை கற்களால் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் பந்தல் போட்டு, தெருவில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் அங்கிருந்த நாற்காலிகளை நகர்த்திவிட்டு செல்ல முயன்றார். அப்போது நாற்காலிகள் சரிந்து விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த துக்க வீட்டிற்கு வந்திருந்த வாலிபர்கள் சிலர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்களை துரத்தினர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பிரசாந்த் டீ குடிப்பதற்காக துக்க வீட்டின் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பார்த்ததும் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் பிரசாந்த்தை துரத்தி சென்று அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த பிரசாந்த் தனது நண்பர்களுக்கு போன் செய்தார்.

பின்னர் அங்கு வந்த நண்பர்கள் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் பிரசாந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர். அங்கு பிரசாந்த்தின் உடலை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் போலீசார், கண்ணதாசனின் வீட்டை சேதம் செய்ததற்காக உங்களிடம் விசாரிக்க வேண்டியது இருக்கிறது என போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பிரசாந்த்தை அடித்துக்கொலை செய்த கண்ணதாசன் உள்ளிட்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

பின்னர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரசாந்த்தின் உறவினர்கள், கண்ணதாசனின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் இவர்கள் இல்லை, விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பிரசாந்த்தை அடித்துக்கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர்.

அதைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வந்த பிரசாந்த்தின் உறவினர்கள் உடலை வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story