திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை


திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் கடைவீதி, பழைய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் எந்த நேரமும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடைகளின் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு, தள்ளுவண்டி, தரைக்கடைகள் போன்றவற்றால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, திருவாரூர் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி, திருவாரூர் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதற்குள் வியாபாரிகள் தாமாக முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். இல்லையென்றால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவின தொகை கடை உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரச்சினை

அதன்படி நேற்று திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில், நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் குமரசெல்வன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் 2 பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தஞ்சை பைபாஸ் சாலையில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.

பெரும்பாலான இடங்களில் வியாபாரிகள் தங்களது கடையின் எல்லை தாண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை, விளம்பர பலகைகளை அகற்றி இருந்தனர். கடை வாசலில் முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சிமெண்டு தரை தளங்களை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் கடைகளின் முன்பாக உள்ள கூரைகள், பெயர் பலகைகள் போன்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இதனால் ஒரு சில இடங்களில் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு வரவேற்கிறோம். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கடைவீதி அகன்று விரிந்து காணப்படுகிறது. ஆனால் இடித்து அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதனை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து கண்காணிப்பு செய்தால் மட்டுமே ஆக்கிரமிப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story