செஞ்சியில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது டிரைவரும் சிக்கினார்


செஞ்சியில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது டிரைவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 20 Jun 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35), விவசாயி. இவர் தனது வயலை சமன் செய்வதற்காக ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கிருந்த செஞ்சி தாசில்தார் ஆதிபகவானை சந்தித்து வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டார். அப்போது தாசில்தார், ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ளிச் செல்ல அனுமதி வழங்க முடியும் என்றும், அந்த பணத்தை ஜீப் டிரைவர் கந்தசாமியிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வடிவேலு இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வடிவேலுவுக்கு சில அறிவுரைகளை கூறியதோடு, ரசாயன பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி, நேற்று மதியம் செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு வடிவேலு சென்று, லஞ்ச பணத்தை தாசில்தாரின் ஜீப் டிரைவர் கந்தசாமியிடம் கொடுத்தார். அதன்பிறகு காந்தசாமி அந்த பணத்தை தாசில்தார் ஆதிபகவானிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் ஆதிபகவானையும், டிரைவர் கந்தசாமியையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் தாசில்தாரிடம் இருந்த ரூ.8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்ததோடு, தாசில்தார் மேஜையில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்ட விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செஞ்சி தாசில்தார் மற்றும் அவரது ஜீப் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story