மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு அபராதம்


மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 6:53 PM GMT)

மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் டிரைவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் பகுதியில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக பல்வேறு தரப்பினரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர். மேலும் அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் இருபுறமும் தொங்க விடப்படும் புத்தக பைகள் விபத்தை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாசலம் மற்றும் அதிகாரிகள் நேற்று கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் சாலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தஞ்சையில் இருந்து திருவாரூக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற ஒரு லாரியை நிறுத்தி அதன் ஆவணங்களை சோதனை செய்தனர்.

இதில் அந்த லாரி உரிமம் இல்லாமல் இயக்கப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த லாரியின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல கும்பகோணம்-தஞ்சை சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 ஆட்டோக்களில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆட்டோக்களையும் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர்கள் 4 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாசலம் கூறியதாவது:-

ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மேல் ஏற்றி செல்லக்கூடாது. அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்றால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். பள்ளி வேன்களில் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்கிறார்களா? என பள்ளி நிர்வாகம் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை இயக்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story