கணவன் தன்னுடன் பேசாததால் 2 குழந்தைகளுடன் விஷம் தின்று பெண் தற்கொலை முயற்சி சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு


கணவன் தன்னுடன் பேசாததால் 2 குழந்தைகளுடன் விஷம் தின்று பெண் தற்கொலை முயற்சி சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 20 Jun 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே கணவன் தன்னுடன் பேசவில்லையே என்ற ஏக்கத்தில் 2 குழந்தைகளுடன் விஷம் தின்று பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே அலுந்தலைப்பூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரியா(26). இவர்களது மகன்கள் பரிவர்ஷன்(5), ரிஷிவர்தன்(3). வெளிநாட்டில் வேலை செய்து வந்த ராஜேஷ்கண்ணன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் வெளிநாடு செல்லாமல், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக ராஜேஷ்கண்ணன் தனது மனைவியுடன் சரிவர பேசுவதில்லை. அதே நேரம் தனது மகன்களுடன் அவ்வப்போது செல்போனில் பேசி, பாசமாக இருந்துள்ளார். ஆனால், தான் சம்பாதிக்கும் பணத்தை அவர் வீட்டு செலவுக்கு பிரியாவிடம்கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

தாலி கட்டிய கணவன், தன்னிடம் பேசுவதை தவிர்த்து வருகிறாரே என்று பிரியா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஆனால், தான் இறந்துவிட்டால், தனது 2 மகன்களும் அனாதையாகிவிடுவார்களே என்று நினைத்த அவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலிமருந்தை(விஷம்) குழந்தைகளுக்கு கொடுத்து, அவரும் தின்றார். இதில் மயங்கி விழுந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் இரவு சிறுவன் பரிவர்ஷன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெற்ற குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story