தலைமையாசிரியை பணிக்கு வராததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டம்


தலைமையாசிரியை பணிக்கு வராததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 7:46 PM GMT)

தலைமையாசிரியை பணிக்கு வராததை கண்டித்து தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன் வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் கிருஷ்ணவேணி என்ற தலைமை ஆசிரியையும், அவருக்கு உதவியாக ஒரு ஆசிரியரும் பணிபுரிந்து வருகின்றனர். கிருஷ்ணவேணி பள்ளிக்கு தொடர்ந்து சரியாக வருவதில்லை. தினமும் கால தாமதமாக வருகிறார். இதனால் பள்ளி மாணவர்களின், பெற்றோர்கள் தலைமை ஆசிரியையிடம் பலமுறை நீங்கள் எதற்கு காலதாமதமாக வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தான் நான் பள்ளிக்கு சரிவர வர முடியவில்லை என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக மாணவர் களின் பெற்றோர், கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பலமுறை புகார் தெரிவித்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்தும் பள்ளி தலைமை ஆசிரியை பள்ளிக்கு சரிவர வருவதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளிக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் 2 பேரும் வராத காரணத்தினால் மாணவர்கள் பள்ளி வாசலிலேயே அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் முத்துகுமார், அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு பள்ளியில் இருந்து கூடுதலாக இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது.

Next Story