பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2019 10:45 PM GMT (Updated: 19 Jun 2019 7:59 PM GMT)

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.), சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை நுழைவு வாயில் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, தொ.மு.ச.வின் திருச்சி-கரூர் மண்டல தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மண்டல பொது செயலாளர் குணசேகரன், தி.மு.க. நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர் மண்டலத்துக்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி பணிமனைகளில் பணியாற்றிய சிலரை எந்தவித அடிப்படை குற்றச்சாட்டும் இல்லாமல் காரைக்குடி மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். அந்த உத்தரவினை திரும்ப பெற வேண்டும்.

உரிய விடுப்பு வழங்கக்கோரி...

போக்குவரத்து கழக பணியாளர்களை மிகைப்பணி பார்க்க நிர்ப்பந்திக்க கூடாது. உரிய விடுப்பு வழங்கிட வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட பணப்பலன்களை உடனடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். 2018 மார்ச் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் அண்ணாவேலு, வி.கே.டி.ராஜ்கண்ணு மற்றும் சி.ஐ.டி.யு. பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. ராஜேந்திரன் உள்பட போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story