அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்தும், சீரான மின்வினியோகம் செய்ய வலியுறுத்தியும் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.. இரவு நேரத்திலும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஸ்பிக்நகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ரத்தினதுரை, செயலாளர் தேவராஜ், பொருளாளர் முருகேசன், பவித்ரா முருகேசன் ஆகியோர் தலைமையில் முத்தையாபுரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

முத்தையாபுரம் பகுதியில் சீரான மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து முற்றுகையிட்ட மக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் தூத்துக்குடியில் உள்ள மின்சாரவாரிய அலுவலகத்துக்கு சென்று செயற்பொறியாளர் சாக்கனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர் சீரான மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story