சாத்தான்குளத்தில் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை


சாத்தான்குளத்தில் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Jun 2019 10:45 PM GMT (Updated: 19 Jun 2019 9:13 PM GMT)

சாத்தான்குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து நகர பஞ்சாயத்து அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சாத்தான்குளம்,

தமிழகத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில் 9 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 9 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகள், சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் துரைராஜ் தலைமையில், நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து, முற்றுகையில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் அதிகாரி கள் அபராதம் விதித்த ரூ.5 ஆயிரத்தில், ரூ.4 ஆயிரத்தை வியாபாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story