நெல்லையில் அணு பேரிடர் மருத்துவமனை: மத்திய குழுவினர் ஆய்வு


நெல்லையில் அணு பேரிடர் மருத்துவமனை: மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அணு பேரிடர் மருத்துவமனை தொடங்குவது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

நெல்லை,

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நெல்லையில் அணு பேரிடர் மருத்துவமனை தொடங்குவது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 2 அணு உலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடத்தப்படுகிறது. அணு உலை மற்றும் அணுக்கழிவு மையத்தால் பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழு வந்தனர். அவர்கள், அணு உலை பாதிப்பு ஏற்பட்டால் அவசர சிகிச்சை செய்வதற்கு வசதிகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். தனியாக அணு பேரிடர் மருத்துவமனை அமைக்க இட வசதி இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

மேலும் புதிதாக கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story