மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை + "||" + Near the Palladam 25-pound jewelry theft at LIC agent's home

பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை

பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
பல்லடம்,

பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 25 பவுன்நகை மற்றும் ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 45). எல்.ஐ.சி.முகவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (40). இவர்களுடைய மகன் ரோகன் கார்த்திக் (19). இவர் கோவையில் தங்கி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் கண்ணா சென்றபோது, விபத்து ஏற்பட்டது. இதில் ராஜேஷ் கண்ணா காயம் அடைந்தார். இதையடுத்து பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு துணையாக அவருடைய மனைவி கவிதா ஆஸ்பத்திரியில் உடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு கவிதா சென்று விட்டார். இதற்கிடையில் இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் முத்துச்செல்வி என்பவர் கவிதாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் கவிதா இல்லாத நிலையில் வீடு மட்டும் திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் அவர் விசாரித்தபோது, ஆஸ்பத்திரிக்கு கவிதா சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு முத்துச்செல்வி சென்றார். பின்னர் அங்கு இருந்த கவிதாவிடம், நீங்கள் இங்கு இருக்குறீர்கள், ஆனால் உங்கள் வீடு திறந்து இருக்கிறதே? என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, உடனே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் திறந்து இருந்தன. அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன.. இதனால் பதற்றத்துடன் அதில் இருந்த நகைகள் மற்றும் வைர நெக்லஸ் இருக்கிறதா? என்று பார்த்தபோது அவற்றை காணவில்லை. அதாவது வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன்நகை, ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள வைரநெக்லஸ் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்குவிரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

வீட்டை பூட்டி விட்டு கவிதா ஆஸ்பத்திரிக்கு சென்றதை நன்கு நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன்நகை, ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எல்.ஐ.சி.முகவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.