ஆரணி அரசு மருத்துவமனையில் பிளஸ்–2 மாணவன் திடீர் சாவு டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார்
ஆரணி அரசு மருத்துவமனையில் பிளஸ்–2 மாணவன் திடீரென இறந்தான். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் கூறினர்.
ஆரணி,
ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், பட்டு நெசவு தொழிலாளி. இவருடைய மகன் ஹரிகரன் (வயது 17). ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற ஹரிகரனுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதுகுறித்து நண்பனிடம் கூறினான். அதற்கு நண்பன் ஒரு மாத்திரை அட்டையை கொடுத்து, இதனை சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகிவிடும் என்று கூறியுள்ளான். இதையடுத்து அந்த மாத்திரையை வாங்கி ஹரிகரன் சாப்பிட்டான்.
பள்ளி முடிந்தவுடன் ஹரிகரன் வீட்டுக்கு வந்தான். இரவு 9.30 மணி அளவில் வயிற்றுவலி அதிகமாகி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
உடனடியாக அவனை சிகிச்சைக்காக ஆரணி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென சிகிச்சை பலனின்றி ஹரிகரன் பரிதாபமாக இறந்தான். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹரிகரனின் சாவுக்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.