பெண்ணின் ஆபாச படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பிய வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூரில் பெண்ணின் ஆபாச படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பட்டித் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 26). இவர் அந்த பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும், வீரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வீரமணி அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை பெண்ணிற்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பெண் வீரமணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை கேட்டு உள்ளார். வீரமணி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணிற்கு வீரமணி வாட்ஸ்–அப் மூலம் அப்பெண்ணின் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மனைவியை அவரது தாய்வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த இளம்பெண், வீரமணியை கைது செய்யக்கோரி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.