முன்அறிவிப்பின்றி ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதை கண்டித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
முன்அறிவிப்பின்றி ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதை கண்டித்து, விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூரில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள், ராஜா வாய்க்காலில் முன் அறிவிப்பின்றி தண்ணீர் நிறுத்தியதை கண்டித்து பேசினார்கள். மேலும் மராமத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்தியதால் வாழை, வெற்றிலை, கரும்பு மற்றும் கோரை உள்ளிட்ட பணப்பயிர்கள் காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து வரும் தனியார் நீரேற்று பாசன சங்கங்களை தடுத்து நிறுத்த வேண்டும். புகளூர் காகித ஆலைக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் விவசாயிகளிடம் பேசும்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை அடுத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் நன்செய் இடையாறு விவசாயிகள் சங்கத்தலைவர் மாயாண்டி கண்டர், ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, பொத்தனூர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் செந்தில் நாதன், ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி, துணைத்தலைவர் குப்புதுரை மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story