வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 பயிற்சி வகுப்புகளை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கரூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் உரிய இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வருகிற செப்டம்பர் மாதம் 1–ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படவுள்ள குரூப்–4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை வெண்ணமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–


வாழ்க்கையில் கடந்துவிட்ட காலங்கள் திரும்ப வராது. அந்த காலத்தில் நாம் செய்ய மறந்த செயல்களை இப்போது நினைத்து வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதற்கு ஏற்றாற்போல் உங்களுக்கு (தேர்வர்கள்) கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் இலக்கை நோக்கி மட்டுமே ஒருமுகப்படுத்தி தேர்விற்கு இடைப்பட்ட இந்த மூன்று மாத காலத்தை பயன்படுத்திக்கொண்டால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் இதுபோன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்ற மாயைக்குள் நீங்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்றைய காலகட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வெற்றியாளர்கள் தமிழ்வழியில் படித்தவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆங்கிலம் என்பது மொழி தான். அது அறிவல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விஜயா, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story