போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி காயம், நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மதுரை ஆஸ்பத்திரியில் போராட்டம்


போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி காயம்,  நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மதுரை ஆஸ்பத்திரியில் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை முனியாண்டிபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அங்குள்ள ரேஷன் கடை சுவரின் மீது அமர்ந்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுவரில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு எச்சரித்துள்ளனர். இதில், போலீசாருக்கும், அந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இது சம்பந்தமாக போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்த காளஸ்வரன் என்பவரை தாக்கியதாக தெரிகிறது. இதைக்கண்ட 7 மாத கர்ப்பிணியான அவருடைய மனைவி சித்ரா(வயது 22) தடுப்பதற்காக சென்றுள்ளார். இதில் அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சித்ரா மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் சரிவர தகவல்கள் தெரிவிப்பதில்லை என்றும், கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சித்ராவின் உறவினர்கள் நேற்று மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தாக்குதல் நடத்திய 5 போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதுகுறித்து, அந்த பெண்ணின் கணவர் காளஸ்வரன் கூறும்போது, “என் மனைவியை போலீசார் காலால் வயிற்றில் எட்டி உதைத்தனர். இதில், 7 மாத கர்ப்பிணியான அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை தாக்கிய போலீசாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மறுத்த பெரிய ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் அளித்த புகாரின் பேரில் காளஸ்வரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story