கண்டலேறு அணையில் 4½ டி.எம்.சி. தண்ணீர் பருவமழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்


கண்டலேறு அணையில் 4½ டி.எம்.சி. தண்ணீர் பருவமழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் 4.45 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பருவ மழை பெய்தால் மட்டுமே கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியும் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

செங்குன்றம்,

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு திறந்து விட வேண்டும்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் திறந்துவிட்ட தண்ணீர் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழுவதுமாக வறண்டு விட்டதால் சென்னை அருகே உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், நீர்வளத்துறை செயற் பொறியாளர் ஜெயராமன், பாலாறு மண்டல முதன்மை பொறியாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழு கடந்த 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்றது.

அவர்கள் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது கண்டலேறு அணையில் 4.45 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் இருப்பில் உள்ளதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

பருவமழை பெய்து அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி. ஆனால் மட்டுமே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம். இல்லை என்றால் தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. மேலும் கிருஷ்ணா நதி கால்வாய் பராமரிப்பு பணிகளுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் ஆந்திர அரசுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும். இந்த பராமரிப்பு தொகை கடந்த 10 ஆண்டுகளாக செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.

அந்த நிலுவைத்தொகையில் உடனடியாக ரூ.50 கோடி செலுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் எப்படியாவது கிருஷ்ணா நதி நீர் பூண்டிக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நீர்பாசனத்துறை மந்திரி அனில்குமார் பார்வைக்கு கொண்டு செல்வதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கூறினர். இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர்.

Next Story