பதவி ஏற்கும்போது ‘தமிழ் வாழ்க’ என கோஷம்: ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட தமிழக எம்.பி.க்களின் இரட்டை வேடம் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு


பதவி ஏற்கும்போது ‘தமிழ் வாழ்க’ என கோஷம்: ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட தமிழக எம்.பி.க்களின் இரட்டை வேடம் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 7:10 PM GMT)

நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்போது ‘தமிழ் வாழ்க’ என கோஷமிட்ட தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு இரட்டை வேடம் போட்டு உள்ளனர் என்று அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் வண்ணாந்துறை பகுதியில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக அவர், அந்த இடத்தை தான் வாங்கியதாக கூறி அங்குள்ள ஒரு வீட்டை இடித்துள்ளார். மற்ற வீடுகளை இடிப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதி மக்களை இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சந்தித்தார். அவருடன் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுகுமார், நகர செயலாளர் சதீஷ்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் மவுலி, இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவன தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகளுக்கு நடந்த சம்பவம் குறித்து மத்திய சலவை தொழிலாளர் சங்க தலைவர் திராவிடமணி, செயலாளர் ரவி, துணை செயலாளர் கணேசன் ஆகியோர் விளக்கி கூறினர்.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

160 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை அரண்மனை நிர்வாகம், சலவை தொழிலாளர்களுக்கு வண்ணாந்துறை பகுதியில் வீடு கட்டிக்கொடுத்துள்ளது. அந்த வீடுகள் இருக்கும் இடத்தை தான் வாங்கியதாக கூறிய ஒருவர் அங்குள்ள ஒரு வீட்டை இடித்துள்ளார். நீதிமன்ற உத்தரவு இந்த பகுதி மக்களுக்கு சாதகமாக இருக்கும்போது போலீசார், வருவாய்த்துறையினர் தனி நபருக்கு ஆதரவாக இருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த பகுதியில் உள்ள வீடுகளை இடித்தால் நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துவோம். மேலும் இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க சென்ற எங்கள் கட்சியை சேர்ந்த கார்த்திக்ராவ் போன்ஸ்லேவை போராட்டத்தை தூண்டியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த மக்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

மக்களின் வசிப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும். தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாநகரின் வளர்ச்சியை அழிக்க சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் அவ்வாறு தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். கோதாவரி-காவிரி நதியை இணைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற தமிழக எம்.பி.க்களில் சிலர், ‘தமிழ் வாழ்க’ என கோஷமிட்டனர். அதே நேரத்தில் ‘தமிழ் வாழ்க’ என்று கோஷமிட்டு பதவி ஏற்றவர்களில் சிலர், ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அவர்களின் முகத்திரையை கிழித்து எறிவோம்.

தஞ்சை நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்டும் முயற்சியை சிலர் தடுக்கிறார்கள். கோவில் கட்ட விடமாட்டோம் என்கிறார்கள். நீதிமன்றம் கோவில் கட்ட அனுமதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் தஞ்சை நிர்மலா நகர் பகுதியில் உள்ள மக்களை சந்திக்கவும், கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இடத்தை பார்வையிடவும் செல்லப்போவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

Next Story